திவாகர யோகி என்பவர் மகாவிஷ்ணுவின் தரிசனத்திற்காக கடுந்தவம் செய்தார். அவருக்கு அநுக்கிரகம் செய்ய பகவான் திருவுள்ளம் கொண்டு இரண்டு வயதுள்ள குழந்தையாக அவர்முன் தோன்றினார். குழந்தையின் அழகில் மயங்கிய யோகி, அக்குழந்தையை தன்னுடனே இருக்குமாறு வேண்ட, குழந்தையும் ஒப்புக்கொண்டது. ஒருநாள் முனிவர் பூஜை செய்துக் கொண்டிருந்தபோது, குழந்தை அங்கிருந்த சாளக்கிராமம் ஒன்றை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு ஓடியது.
இதைக்கண்ட முனிவர் கோபம் கொண்டு குழந்தையைத் துரத்திக் கொண்டுச் சென்றார். குழந்தை ஒரு இலுப்பை மரப்பொந்தில் சென்று மறைந்து விட்டது. யோகி அங்குச் சென்று பார்க்க, அம்மரம் கீழே விழுந்து பகவான் அனந்த சயன வடிவத்துடன் காட்சி தந்ததாக ஐதீகம்.
மூலவர் அனந்தபத்மநாபன் என்ற திருநாமத்துடன் கிடந்த திருக்கோலம், புஜங்க சயனம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். மூலவர் மிகப்பெரிய திருமேனியாதலால், மூன்று வாசல் வழியே சிரஸ், உடல், திருவடி என்று தனித்தனியே தரிசனம் செய்ய வேண்டும். தாயாருக்கு ஸ்ரீஹரிலட்சுமி என்பது திருநாமம். இந்திரன், ஏகாதச ருத்ரர்கள், சந்திரன் ஆகியோருக்கு பகவான் பிரத்யக்ஷம்.
இத்தலத்தில் உள்ள ஹனுமன் மீது சாத்தப்படும் வெண்ணெய் எவ்வளவு நாளானாலும் கெட்டுப் போவதில்லை, எவ்வளவு வெயில் அடித்தாலும் உருகுவதில்லை. வேதாந்த தேசிகன் மங்களாசாசனம் செய்த ஸ்தலம்.
நம்மாழ்வார் 11 பாசுரங்கள் பாடியுள்ளார். இக்கோயில் காலை 4 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|